நியூயார்க் : கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கம்ப்யூட்டர் திரையை நீண்ட நேரம் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை நடத்தினர்.அதில், கம்ப்யூட்டர், லேப்-டாப், ஐபாட் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பவர்களுக்கு, நாளடைவில், தூக்கம் வருவதில் சிக்கல் ஏற்படுவதாக தெரிய வந்தது.கம்ப்யூட்டர் திரையிலிருந்து வெளிப்படும் அதிக சக்தி வாய்ந்த ஒளிக்கற்றைகள், மனித மூளையின் வழக்கமான செயல்பாடுகளை பாதிப்பதும் தெரிய வந்தது.மனித மூளை, காலை சூரிய வெளிச்சம் வந்தவுடன் இயங்க ஆரம்பித்து இரவு சூரிய ஒளி மங்கியவுடன் செயல்பாடுகளை குறைத்துக் கொள்ளும் வகையில் செயல்படுகிறது.இதை, மெலட்டோனின் என்ற ஹார்மோன் கட்டுப்படுத்துகிறது.
இது அறிவியல் விந்தையாக கருதப்படுகிறது.ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கம்ப்யூட்டர் போன்ற மின்னணு சாதனங்களிலிருந்து வெளிப்படும் நீல நிற வெளிச்சம், மெலட்டோனின் ஹார்மோன் செயல்பாட்டை பாதித்து, தூக்கத்தை கெடுப்பதாக தெரிவிக்கின்றனர். மனிதனின் கண்கள், நீல நிறத்தை பகல் பொழுதாக எடுத்துக் கொள்ளும் தகவமைப்பை பெற்றுள்ளது என, அவர்கள் தெரிவிக்கின்றனர்.இரவில் நிம்மதியாக தூங்க, நல்ல புத்தகங்களை படிப்பது சிறந்த வழி. தொடர்ந்து கம்ப்யூட்டர் பார்க்கும்போது, அதிலிருந்து வரும் வெளிச்சத்தை கொண்டு மெலட்டோனின் ஹார்மோன் இரவில் தூக்கம் வருவதை தவிர்த்து, விழிப்புடன் இருக்க, மூளையை தூண்டும். இதனால், தூக்கம் வருவதில் நாளடைவில் சிக்கல் எழும் என, நார்த்வெஸ்ட் பல்கலைக் கழக மூளை அறிவியல் துறை பேராசிரியர் பில்லீஸ் சீ தெரிவித்துள்ளார்